மத்திய அரசுக்கு ரூ.292 நிர்ணயம்: கோவி‌ஷீல்டு தடுப்பூசி விலையை அறிவித்தது சீரம் நிறுவனம்!

கோவி‌ஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது, சற்று குறைந்து வருகிறது. இருப்பினும், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவி‌ஷீல்டு மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. ஜனவரி 13-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கோவி‌ஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. தற்போது, சீரம் நிறுவனம் கோவி‌ஷீல்டு தடுப்பூசியின் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இது தொடர்பாக சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசி அனைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில், மலிவான விலையில் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே தான் இந்திய அரசிற்கு தடுப்பூசியை 3 முதல் 4 அமெரிக்க டாலர் (ரூ.219-292) என்ற மலிவு விலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக அதிக அளவில் வாங்குவதால் மலிவு விலைக்கு கொடுக்கப்படும் என்றார்.

கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு முதலில் வழங்கப்படுகிறது. அடுத்ததாக சர்வதேச கூட்டணி நாடுகளுக்கும் வழங்கப்படும் என்றார். தனியாருக்கு கொரோனா தடுப்பூசி இரு மடங்கு விலையில் விற்கப்படும். ஒரு மாதத்துக்குள் 10 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் எனவும், ஏப்ரல் மாதத்திற்குள் 20 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் என்றார். மத்திய அரசு ஜூலை மாதத்துக்குள் 30 கோடி டோஸ்கள் கேட்டிருப்பதாகவும் அடார் பூனவல்லா தெரிவித்தார்.

More News >>