சபரிமலையில் 8ம் தேதி முதல் தரிசனம் செய்ய விரும்புவர்கள் நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை தரிசனம் செய்ய விரும்புவர்கள் நாளை 6ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக கடந்த டிசம்பர் 30ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. மறுநாள் 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கட்டம் கட்டமாக மட்டுமே முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரும் 7ம் தேதி வரை முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனவரி 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை தரிசனம் செய்ய விரும்புவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் முன்பதிவு தொடங்குகிறது. நாளை மாலை 6 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது. பக்தர்கள் http://www.sabarimalaonline.org/ என்ற இணையதளத்தில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆர்டிபிசிஆர் அல்லது ஆர்டி லேம்ப் அல்லது எக்ஸ்பிரஸ் நாட் ஆகிய பரிசோதனைகளில் ஏதாவது ஒரு பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கடந்த மண்டல காலத்தில் பக்தர்கள் ஆண்டிஜன் பரிசோதனை நடத்தினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சபரிமலையில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்ததால் மகரவிளக்கு காலம் முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.