பறவை காய்ச்சல் கேரளாவில் இருந்து கோழி, முட்டை கொண்டு செல்ல தமிழகம் தடை விதிக்கவில்லை கேரள அமைச்சர் தகவல்

கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டு செல்ல தமிழகம் இதுவரை தடை விதிக்கவில்லை என்று கேரள கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜு கூறியுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் பள்ளிப்பாடு, கருவாற்றா, தகழி மற்றும் நெடுமுடி ஆகிய பஞ்சாயத்து பகுதிகளில் தான் அதிகளவில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து இந்த பகுதியில் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் கோழி, வாத்து மற்றும் அலங்காரப் பறவைகள் உட்பட அனைத்து பறவைகளையும் கொல்ல தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நேற்று முதல் பறவைகளை கொல்லும் பணி தொடங்கியது.

பறவைகள் கொல்லப்பட்ட உடன் தீ வைத்து உடனடியாக எரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கொன்று எரிக்கப்பட்டன. இன்றும் பறவைகளைக் கொல்லும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பறவைக் காய்ச்சல் கேரளாவில் மாநில பேரிடர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மாவட்டங்களிலும் இறைச்சி, முட்டை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கோழி, முட்டைகள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கேரளாவில் இருந்து கோழி, முட்டைகள் கொண்டுவர தமிழகம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை கேரள கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜு மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளை கொல்லும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக வேறு எங்கும் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்படவில்லை. கொல்லப்படும் பறவைகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டு செல்ல தமிழகம் தடை விதித்துள்ளதாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் இல்லை. இதுவரை தமிழகம் தடை விதிக்கவில்லை. பறவைக் காய்ச்சலால் யாரும் பீதியடைய தேவையில்லை. இரண்டு நாட்களுக்குள் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>