சென்னை, கோவை மாவட்டங்களில் நீடிக்கும் கொரோனா பரவல்..

சென்னை, கோவை மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் நீடித்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாக பரவியது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு தொற்று பரவல் குறையத் தொடங்கியது. தற்போது வரை மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு நேற்று(ஜன.5) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 820 பேரையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 22,370 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 971 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 2385 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 11 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,177 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7808 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். சென்னை(235பேர்), கோவை(81பேர்), செங்கல்பட்டு(55) மாவட்டங்களில் மட்டும் நேற்று புதிதாக 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதித்திருக்கிறது.

மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. திருவள்ளூர்(44), ஈரோடு(31), சேலம்(30), காஞ்சிபுரம்(29) தவிர மற்ற மாவட்டங்களில் மிகவும் குறைவானவர்களுக்கு பாதித்துள்ளது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 26,700 பேருக்கும், செங்கல்பட்டில் 50,319 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42,849 பேருக்கும், கோவையில் 52,732 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில்தான் புதிதாக 30, 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் நோய் பரவல் கட்டுப்பட்டுள்ளது.

More News >>