வயதான பெண்ணிடம் ஏன் தொடர்பு வைக்கணும்.. பாஜக தலைவர் மோசமான பேச்சு..
அவர்கள் ஏன் வயதான பெண்ணிடம் தொடர்பு வைக்கணும்? என்று காங்கிரசின் மூத்த பெண் தலைவரை ஆபாசமாக பாஜக தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது திரிவேந்திரசிங் ராவத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பாஜக மாநில தலைவராக பன்சிதார் பகத் இருக்கிறார். சட்டசபையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த பெண் தலைவர் இந்திரா ஹரிதாயேஷ் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
சமீபத்தில் இந்திரா ஒரு கூட்டத்தில் பேசும் போது, தங்களிடம் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பலரும் தொடர்பில் உள்ளதாகவும், ஆட்சியே கவிழ்ந்து விடலாம் என்றும் குறிப்பிட்டார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் பன்சிதார் பகத் பேசினார். அப்போது அவர், எங்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏன் வயதான பெண்ணிடம் தொடர்பு வைக்கணும்? என்று இரட்டை அர்த்தம் தொனிக்க ஆபாசமாக பேசினார்.
இது ஊடகங்களில் வெளியானது. இதனால், அவருக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது பற்றி, இந்திரா ஹரிதாயேஷ் கூறுகையில், பகத் பேச்சு எனக்கு மன உளைச்சலை அளித்துள்ளது. பாஜகவின் மாநில தலைவரான அவர் பேசியது, பாஜகவின் குரலாக தெரிகிறது. இப்படி பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.