நாளை 3வது டெஸ்ட் 3வது வேகப்பந்துவீச்சாளர் யார்? நடராஜனா, தாக்கூரா, செய்னியா? குழப்பத்தில் இந்திய அணி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு பதிலாக அணியில் இடம்பெற நடராஜன், நவ்தீப் செய்னி மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் யாரை தேர்வு செய்வது என்பதில் இந்திய அணி கடும் குழப்பத்தில் உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. தற்போது தொடர் சமநிலையில் உள்ளதால் இந்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் முகமது ஷமியும், 2வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவும் காயமடைந்தனர். முகமது ஷமி காயம் அடைந்ததால் 2வது டெஸ்ட் போட்டியில் முகம்மது சிராஜ் அரங்கேறினார். அவரும், ஜஸ்பிரித் பும்ராவும் 2வது டெஸ்ட் போட்டியில் மிகவும் அற்புதமாக பந்து வீசினர். இதனால் நாளை தொடங்க உள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இருவரும் அணியில் கட்டாயம் இடம் பிடிப்பார்கள். இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் காயமடைந்தார். தற்போது இவருக்கு பதிலாக 3வது டெஸ்ட் போட்டியில் யாரை சேர்ப்பது என்பதில் தான் இந்திய அணி குழம்பித் தவிக்கிறது.

3வது வேகப்பந்து வீச்சாளருக்கான பட்டியலில் தமிழக வீரர் நடராஜன், நவ்தீப் செய்னி மற்றும் ஷார்துல் தாகூர் ஆகியோர் தயாராக காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனுபவமுள்ள ஷார்துல் தாக்கூருக்கு தான் அதிக வாய்ப்பு என கூறப்படுகிறது. இவரால் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்பதால் தாக்கூருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்களான தீப் தாஸ் குப்தா மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் கூறுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் நவ்தீப் செய்னிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய வீரர்களில் இவர் தான் அதிக வேகத்தில் பந்து வீசக்கூடியவர் ஆவார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இப்படி ஒருவர் தான் வேண்டும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறி வருவதால் நவ்தீப் செய்னியை சேர்த்தால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என கருதப்படுகிறது. இவரது பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகமாக சந்திக்கவில்லை என்பதும் இவருக்கு சாதகமான அம்சமாகும். மூன்றாவதாக இந்தப் பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற்றுள்ளார். அமீரகத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தான் இவருக்கு ஒரு திருப்புமுனை கிடைத்தது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதின் மூலம் நடராஜனுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதன்முதலாக அரங்கேற வாய்ப்பு கிடைத்தது. இந்த இரு போட்டிகளிலும் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் வலை பந்துவீச்சாளர் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இவர் சிறப்பாக பந்து வீசினார். எனவே நாளைய போட்டியில் இவருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் முதல் தரப் போட்டிகளில் மிகவும் குறைவாகவே நடராஜன் விளையாடியிருப்பது இவருக்கு ஒரு குறையாக கருதப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் அணியும் வெள்ளை நிற ஜெர்சி அணிந்து நடராஜன் டுவிட்டரில் தன்னுடைய ஒரு படத்தை வெளியிட்டு வெளியிட்டுள்ளார். அதில், வெள்ளை ஜெர்சி அணிய கிடைத்த வாய்ப்பை நான் ஒரு கவுரவமாக கருதுகிறேன். அடுத்தகட்ட சவாலுக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நாளைய போட்டியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடராஜன் இதை தெரிவித்துள்ளதாகவே கருதப்படுகிறது.

More News >>