கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா ஷிகெல்லாவும், பறவைக் காய்ச்சலும் பரவுவதால் பீதி
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், ஷிகெல்லா நோயும், பறவைக் காய்ச்சலும் பரவுவது மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் தான் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நோய் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உட்பட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்த போது கேரளாவில் மிகவும் குறைவாகவே நோய் பரவல் காணப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா உள்பட நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் நோய் பரவல் குறைந்து வருகின்ற தற்போதைய சூழலில் கேரளாவில் நோய் அதிக அளவில் பரவி வருகிறது. தினமும் சராசரியாக 5,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவுகிறது. தற்போது இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிக நோயாளிகள் உள்ளனர். நேற்று இந்தியாவில் 18,088 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. இதில் கேரளாவில் மட்டும் 5,615 பேருக்கு நோய் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நோய்க்கு பலியாகுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் குறிப்பாக எர்ணாகுளம், பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய மாவட்டங்களில் தான் நோய் பரவல் அதிக அளவில் உள்ளது.
தொடக்கத்தில் பத்தனம்திட்டா மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாவட்டங்களிலும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி சதவீதம் தற்போது 12.3 ஆக உள்ளது. பத்தனம்திட்டாவில் இது 11.6 ஆகவும், எர்ணாகுளத்தில் 10.6 ஆகவும் உள்ளது. நேற்று கேரளாவில் 24 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,184 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மரணமடைந்தவர்களில் 906 பேர் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆவர். கொரோனா பரவல் அதிகரிக்கும் அதே வேளையில், கேரளாவில் ஷிகெல்லா என்ற வைரஸ் நோயும், பறவைக் காய்ச்சலும் பரவுவது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் மாநிலம் முழுதும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.