வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜராக கேரள சபாநாயகரின் செயலாளர் மறுப்பு
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜராக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் செயலாளர் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமீரக தூதரக துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கு கேரளாவில் பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் ஸ்வப்னாவுடன் தொடர்பு வைத்திருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கர் கைது செய்யப்பட்டார். இவர் ஸ்வப்னாவுடன் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர் தவிர முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளரான ரவீந்திரனுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமும் மத்திய அமலாக்கத் துறை பலமுறை விசாரணை நடத்தியது. மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஸ்வப்னா கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளாவில் உள்ள சில முக்கிய பிரமுகர்களுக்காக வெளிநாட்டுக்கு லட்சக்கணக்கில் டாலர்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் சுங்க இலாகா விசாரணை செய்ய தீர்மானித்தது. அதற்கு முன்பாக சபாநாயகரின் உதவி தனி செயலாளர் ஐயப்பனிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது. நேற்று கொச்சியில் உள்ள சுங்க இலாகா ஆணையாளர் அலுவலத்தில் ஆஜராகுமாறு கூறி ஐயப்பனுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் தனக்கு நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று கூறி அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று ஆஜராகுமாறு கூறி அவருக்கு மீண்டும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் சட்டசபை விரைவில் தொடங்க உள்ளதால் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று ஐயப்பன் சுங்க இலாகாவுக்கு தகவல் அனுப்பி உள்ளார். தொடர்ந்து அவர் விசாரணைக்கு ஆஜராக மறுப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள சுங்க இலாகா தீர்மானித்துள்ளது.