பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகரை கைது செய்த சி.பி.ஐ..

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இளம்பெண்களை அடைத்து வைத்து, சில இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த கொடூர ஆசாமிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்றெல்லாம் மக்கள் கொந்தளித்தனர். இது தொடர்பான வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சகோதரர் ஒருவர்தான் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அவரை பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் அடித்து தாக்கினர். இது தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பார் நாகராஜ் என்பவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்பின், கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்குகள், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. கைதான 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து, முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அடுத்த சங்கம்பாளையத்தைச் சேர்ந்த ஹேரேன்பால் (29), வடுகபாளையத்தில் உள்ள வி,கே.வி லே அவுட்டைச் சேர்ந்த பாபு(27) என்ற பைக் பாபு, வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம்(34) ஆகிய 3 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு(ஜன.5) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக உள்ளார். மேலும் டாஸ்மாக் பார்களை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. பாபு இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். மூன்று பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, மாணவரணி செயலாளரான அருளானந்தம், அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் எடுத்துள்ள புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

More News >>