ஆஸ்கரை தொடர்ந்து கிராமி விருது விழா தள்ளிவைப்பு.. அமெரிக்காவில் கொரோனா பீதி எதிரொலி..

கொரோனா பரவல் பீதி இன்னும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா என்ற புதிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகளும் மீண்டும் லாக் டவுன் பற்றி சிந்திக்க தொடங்கி உள்ளன. மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் பீதியால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கேன்ஸ் பட விழாவும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இசை கலைஞர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான கிராமி விருது விழாவும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமி விருது வழங்கும் விழா மார்ச் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். சுகாதார வல்லுநர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இசைத்துறையில் மிக உயர்ந்த கவரவ விருதான கிராமி விருது விழா தாமதமாகிவிட்டதாக ரெக்கார்டிங் அகாடமி மற்றும் ஒளிபரப்பு அமைப்பு ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

"சுகாதார வல்லுநர்கள், எங்கள் நிர்வாகிகள் மற்றும் கலைஞர்களுடன் தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, 63 வது வருடாந்திர கிராமி விருதுகளை மார்ச் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று அந்த அறிக்கை "லாஸ் ஏஞ்சல்ஸில் மோசமடைந்து வரும் கோவிட் நிலைமை, மருத்துவமனை சேவைகள் அதிகம் தேவை இருக்கிறது. மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் புதிய வழிகாட்டுதல்கள் அனைத்தும் எங்கள் நிகழ்ச்சியை ஒத்திவைப்பது சரியானது என்ற முடிவுக்கு வந்துள்ளன," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கொரோனா வைரஸ் இறப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கை ஆகியவற்றில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஜிம்கள், சலூன்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன, மேலும் குடியிருப்பாளர்கள் முடிந்தவரை வீட்டில் தங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

More News >>