பறவை காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் உருமாறினால் ஆபத்து கேரள அமைச்சர் தகவல்
பறவை காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் உருமாறினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கேரள கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜு கூறினார்.கேரள மாநிலம் தற்போது தொற்று நோய்களின் கூடாரமாக மாறி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஷிகெல்லா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் என அடுத்தடுத்து கொள்ளை நோய்கள் பரவி வருகின்றன.
கடந்த சில வாரங்களாக இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. தினமும் சராசரியாக 5,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. நேற்று 5600க்கும் மேற்பட்டோருக்கும், இன்று 6,394 பேருக்கும் நோய் பரவியுள்ளது. இதற்கிடையே கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் பீதியை ஏற்படுத்தியது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பீதிக்கு இடையே கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவியது பீதியை மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் இன்று முதல் பறவைகளைக் கொல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரள கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜு கூறியது: ஆலப்புழாவில் இதுவரை 37,654 பறவைகளும், கோட்டயம் மாவட்டத்தில் 7,229 பறவைகளும் கொல்லப்பட்டுள்ளன. ஏற்கனவே நோய் பாதித்து 23,757 பறவைகள் மடிந்துள்ளன. நாளையும் பறவைகளைக் கொல்லும் பணி நடைபெறும்.
இதுவரை வாத்துக்கள் மட்டும் தான் கொல்லப்பட்டு வருகின்றன. நோய் பாதித்த பகுதிகளில் உள்ள மற்ற பறவைகளும் கொல்லப்படும். பறவை காய்ச்சலுக்குக் காரணமான H5N8 என்ற வைரஸ் மனிதர்களுக்குப் பரவாது. ஆனால் இந்த வைரஸ் உருமாற வாய்ப்பு உண்டு. அவ்வாறு உருமாறினால் அது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே வரும் 10 நாட்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோய் பாதித்த பகுதிகளில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.