பறவை காய்ச்சல்: சிக்கன், முட்டை சாப்பிடலாமா?

இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (bird flu) என்று குறிப்பிடப்பட்டும் இந்நோயால் இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் ஏறத்தாழ 25,000 வாத்துகள், காகங்கள் மற்றும் புலம்பெயர் பறவைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கோவிட்-19 பாதிப்பு இருக்கும் நிலையில் பறவை காய்ச்சல் பரவும் செய்தி மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.

பறவை காய்ச்சல் (bird flu) ஒரு வைரஸ் நோயாகும். அது கொள்ளைநோயாக மாறக்கூடியது. ஆனாலும், முன்னெச்சரிக்கை செயல்பாடுகளைக் கையாளுமாறும், பீதி கொள்ளத் தேவையில்லையென்றும் சுகாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். பறவை காய்ச்சல் எச்5என்1 (H5N1) என்ற வைரஸால் ஏற்படுகிறது. அது மனிதரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் வாய்ப்பு அரிதானது என்றும் கூறப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட பறவைகளோடு நெருக்கமாக இருக்கக்கூடிய மனிதர்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

பறவை காய்ச்சல் பற்றிய செய்தி தெரிந்ததுமே அநேகர் முட்டைகளையும் கோழி இறைச்சியையும் சாப்பிடாமல் தவிர்க்கின்றனர். ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா நோய் முட்டையைச் சாப்பிடுவதன் மூலம் பரவுவது குறித்து தகவல் ஏதும் இல்லை. பயத்தைத் தவிர்ப்பதற்காக முட்டைகள் மற்றும் கோழி இறைச்சியை நன்கு வேக வைத்துச் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.முட்டை மற்றும் இறைச்சியைப் பாதி அவிந்த நிலையில் அல்லது சமைக்காமல் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இறைச்சியைக் கழுவுவதற்கும் சமைப்பதற்கும் வேறு வேறு பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். கோழி இறைச்சியைக் கழுவி, சமைப்பதற்கு முன்பு சோப்பு பயன்படுத்தி கைகளை நன்கு கழுவலாம். கோழி இறைச்சியை ஆவியில் நன்கு சமைத்து பின்னர் சாப்பிட வேண்டும் என்று கூறும் வல்லுநர்கள், இப்படிச் செய்வதால் தேவையற்ற பயத்தைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

பறவை காய்ச்சல் இன்னும் மக்கள் பயன்படுத்தும் பறவைகளுக்குப் பரவவில்லை. ஆகவே, தேவையற்ற பீதி கொள்ளவேண்டாம். பறவை பண்ணைகளில் பணியாற்றினால் கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும். மற்றவர்கள் பறவைகளின் எச்சங்கள் மற்றும் நோயுற்ற, இறந்த பறவைகளைத் தொடுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இப்போது வரைக்கும் நன்கு சமைத்த முட்டைகள் மற்றும் கோழி இறைச்சியைச் சாப்பிடப் பயப்பட வேண்டாம் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

More News >>