நாடு முழுவதும் நாளை மீண்டும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை...!
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நாளை மீண்டும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது. இன்று மதியம் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆலோசனை நடத்த உள்ளார்.இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்கான இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஏற்கனவே அனுமதி அளித்து விட்டது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பு ஊசி போடுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் ஏற்பாடுகள் எந்த அளவுக்கு உள்ளது, என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களிலும் இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார். சில மையங்களில் மட்டும் ஒரு சில குறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து நாளை மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் இறுதிக் கட்ட ஒத்திகை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி நாளை உத்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தவிரத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்த மாநிலங்களில் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து இதில் ஆய்வு செய்யப்படும். கடந்த ஒத்திகையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் அனைத்துக்கும் இந்த ஒத்திகையில் தீர்வு காணப்படும்.
நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்காக 1.7 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவி செய்வதற்காக மேலும் மூன்று லட்சம் பேர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது. இதற்கிடையே தடுப்பூசி விநியோகம் தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் இன்று மதியம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் தடுப்பூசி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.