கேரளாவில் இப்போதைக்கு தியேட்டர்களை திறக்க முடியாது... பிலிம் சேம்பர் கூட்டத்தில் முடிவு...!
அரசு உரிய நிவாரணத் தொகை அளிக்காவிட்டால் கேரளாவில் இப்போதைக்கு தியேட்டர்களை திறக்க முடியாது என்று கொச்சியில் நடந்த கேரள பிலிம் சேம்பர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களைப் போலவே கேரளாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் லாக் டவுன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடும் நிபந்தனைகளுடன் தியேட்டர்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் ரசிகர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்ததால் திறக்கப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில் கேரளாவிலும் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பிலிம் சேம்பர் உள்பட மலையாள திரைத் துறையினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 5ம் தேதி முதல் நிபந்தனைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். தியேட்டர்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், கொரோனா நிபந்தனைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தியேட்டர்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பெரும்பாலான தியேட்டர்களில் பராமரிப்புப் பணிகளும் தொடங்கியது.விஜய்யின் மாஸ்டர் படம் வரும் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அன்று முதல் கேரளாவில் பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கேரள பிலிம்சேம்பர் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கொச்சியில் நடந்தது. இக்கூட்டத்தில் தியேட்டர்களை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் உடனடியாக தியேட்டர்கள் திறப்பதற்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இப்போதைக்கு தியேட்டர்களை திறக்க வேண்டாம் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே தியேட்டர்கள் 10 மாதங்களுக்கு மேலாக மூடியிருப்பதால் உரிமையாளர்களுக்குப் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், அதை ஈடுகட்டுவதற்காக அரசு நிவாரணத் தொகை அறிவிக்கும் வரை தியேட்டர்களை திறக்க வேண்டாம் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு முன்பு சினிமா கொடுத்ததற்காக லட்சக்கணக்கில் பாக்கி இருப்பதால், அந்த பாக்கி தொகையைத் தந்தால் மட்டுமே புதிய படங்களை தியேட்டர்களுக்கு கொடுக்க முடியும் என்று சினிமா விநியோகஸ்தர்களும் கூறியுள்ளனர். இதனால் இப்போதைக்குக் கேரளாவில் சினிமா தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.