`பிற மண்ணில் களம் கண்டாலும் தமிழ் பாசம் மாறாது!- ஹர்பஜன் சிங் உருக்கம்
சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இப்படி இருக்கையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஐபிஎல் போட்டி ஒன்று நடந்தது. இந்தப் போட்டியை தமிழகம் இப்போது இருக்கும் சூழலில் நடத்த கூடாது என்று கூறி அரசியல் கட்சிகள் பலவும் கோரிக்கை வைத்தன.
ஆனால், ஐபிஎல் நிர்வாகமோ, `திட்டமிட்டபடி சென்னையில் போட்டிகள் நடைபெறும். இந்த எதிர்ப்புகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் மாற்றம் செய்யபடாது’ என்று தெரிவித்துவிட்டது. இதையடுத்து, போட்டி நடந்த அன்று மைதானம் இருந்த சேப்பாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் கண்டன போராட்டங்கள் நடந்தன.
இது ஐபிஎல் நிர்வாகத்தை சற்று ஆட்டம் காண வைத்தது. மேலும் தமிழக அரசு, `ஐபிஎல் போட்டிகளுக்கு இனிமேல் பாதுகாப்பு தர முடியாது’ என்று கூறிவிட்டது. இதை அனைத்தையும் கணக்கில் கொண்டு சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சென்னை அணியின் வீரர்களில் ஒருவரான ஹர்பஹன் சிங், ` சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது. பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்- நேசமும் துளியும் குறையாது.
மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன். வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்’ என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com