கேரளாவில் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும் கொரோனா
கேரளாவில் கொரோனா நோய் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பரவி வருவதால், தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரக் குழு நாளை கேரளா செல்ல திட்டமிட்டுள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக இந்தியாவிலேயே கேரளாவில் தான் நோய் பரவல் அதிகமாக உள்ளது. தேசிய அளவில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வரும் போது கேரளாவில் நோய் பரவல் அதிகரிப்பது மத்திய சுகாதாரத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாகச் சராசரியாக 5,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவுகிறது. நேற்று 6,394 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இதுவரை இந்த மாநிலத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7.75 லட்சத்தைத் தாண்டிவிட்டது. கடந்த சில வாரங்களாக டெஸ்ட் பாசிட்டிவிட்டி சதவீதம் 10யும் தாண்டி உள்ளது. நேற்று சிகிச்சை பலனின்றி 25 பேர் மரணமடைந்தனர்.
இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,209 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற போதிலும் நோய் பரவல் அதிகரிப்பது மாநில சுகாதாரத் துறைக்கும், மத்திய சுகாதாரத் துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து மத்திய சுகாதாரக் குழு கேரளா சென்று ஆய்வு நடத்தத் தீர்மானித்துள்ளது. இதற்காகத் தேசிய நோய் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.கே. சிங் தலைமையிலான குழு நாளை கேரளா செல்கிறது. இக்குழு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா மற்றும் மாநில சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும். நோய் பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். கொரோனா நோய் பரவல் அதிகமாக உள்ள இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் குழு தீர்மானித்துள்ளது. மேலும் தற்போது கேரளாவில் கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அங்கும் மத்தியக் குழு சென்று ஆய்வு நடத்தத் தீர்மானித்துள்ளது.