50 சதவீத டிக்கெட் விவகாரத்தால் புது சலசலப்பு.. மாஸ்டர், ஈஸ்வரன் மோதலுக்கு தயாராகிறது..
கொரோனா ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களுக்கு 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியது, இதனால் சிறிய படங்கள் மட்டுமே திரைக்கு வந்தன. மாஸ்டர் போன்ற சில பெரிய படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தப்பட்டது.தியேட்டர் அதிபர்கள் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு வந்தனர். நடிகர் விஜய், சிம்பு போன்றவர்களும் 100 சதவீத அனுமதி கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து மாஸ்டர் படம் ரிலீஸுக்கு ஆயத்தமானது. அதே நேரத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படமும் பொங்கல் ரிலீஸ் என்ற அறிவிப்புடன் தொடங்கப்பட்டு ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடித்துப் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. நேற்று முன்தினம் சிம்பு ஒரு அறிக்கை வெளிட்டார். அதில் பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் படத்தை என் ரசிகர்களும், நான் நடித்துப் பொங்கலுக்கு வரும் என் படத்தை விஜய் ரசிகர்களும் பாருங்கள் இரண்டு படமும் வெற்றி பெற வேண்டும் என்ற கோணத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் இரு தரப்பு ரசிகர்களும் பரஸ்பரம் நட்பு பாராட்டினார்கள். ஆனால் தற்போது இருவருக்கும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா வழிகாட்டுதலை மீறி 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு உத்தரவிட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். மத்திய அரசும் கொரோனா வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கோர்ட்டிலும் 100 சதவீத டிக்கெட் அனுமதி எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதனால் 100 சதவீத டிக்கெட் அனுமதி ரத்தாகும் வாய்ப்புள்ளது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் எல்லா தியேட்டரிலும் மாஸ்டர் படத்துக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று தியேட்டர்கள் தரப்பில் கூறப்படுவதாகத் தகவல் பரவுகிறது. இதனால் ஈஸ்வரன் பட ரிலீஸ் பாதிக்கும் நிலை உள்ளது, ஆனால் ஈஸ்வரன் படம் பொங்கல் வெளியீடு என்று அறிவித்தே தொடங்கப்பட்டது.
அதை மாற்றிக் கொள்ள அப்பட தயாரிப்பாளர் விரும்பவில்லை. பொங்கலுக்கு ஈஸ்வரன் வந்தே தீரும் என்று அறிவித்திருக்கிறார்.தியேட்டர் அதிபர்கள் தரப்பிலும் மாஸ்டர் படத்துக்குத்தான் எல்லா தியேட்டருக்கும் முன்னுரிமை தரப்படும் என்று கூறவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக உருவாகி இருக்கும் இந்த சிக்கலால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமூக தீர்வு காண முயற்சி நடக்கிறது.