தமிழகத்தில் மோடிக்கு என்ன வேலை?- கருப்புச் சட்டையுடன் கருணாநிதி எதிர்ப்பு
மோடி தலைமையிலான மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வருகிறார். அவர் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம், மோடி தலைமையிலான மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காட்டும் காலம் தாழ்த்துதலே. எனவே, அவர் இன்று வரும்போது கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன. இதில் திமுக-வும் பங்கெடுத்துள்ளது.
இதையொட்டி, திமுக-வின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திலும், திமுக தலைவர் கருணாநிதி வசித்து வரும் கோபாலபுர இல்லத்திலும் கருப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளன. மேலும், திமுக தலைவர் கருணாநிதியே கருப்புச் சட்டை அணிந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. இந்த போராட்டம் குறித்து திமுக-வின் செயல் தலைவர் ஸ்டாலின், `விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது!’ என்று கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com