ஆன்மீக அரசியல் என்ன.. ஸ்டாலின் கொடுத்த விளக்கம்..

சென்னையில் நடந்த கருத்தரங்கில், ஆன்மீக அரசியலுக்கு விளக்கம் கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.திமுக சிறுபான்மையினர் அணியின் சார்பில், நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:இறைநம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதனால்தான் பெரியார், பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து என்று சொன்னார். பக்திப் பிரச்சாரம் நாடு முழுவதும் நடக்கட்டும், பகுத்தறிவுப் பிரச்சாரமும் நாடு முழுவதும் தொடரட்டும் என்று கலைஞர் சொன்னார். இரண்டு பிரச்சாரமும் கருத்து விவாதமாக இருக்கலாமே தவிர, கைகலப்பு மோதலாக மாறிவிடக் கூடாது என்பதில் திராவிட இயக்கம் தெளிவாக இருந்தது. அதனால்தான் பெரியார் மண்ணில் எந்தக் கோயிலுக்கும் எந்த சேதாரமும் ஏற்பட்டதில்லை.

ஆனால், இப்போது பக்தியை வியாபாரப் பொருளாக, அதுவும் அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு, சொல்வதற்குச் சாதனைகளோ, கொள்கையோ இல்லாததால் மக்களின் ஆன்மிக உணர்வைத் தூண்டிவிட்டுக் குளிர்காய நினைக்கிறார்கள். அரசியலுக்கும் ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அரசியல் என்பது மக்களின் உரிமை சார்ந்தது. ஆன்மிகம் என்பது மனம் சார்ந்தது. இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பவும் முடியாது. இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து ஏமாற்றவும் முடியாது. இது தமிழக அரசியல் களத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். சிறுபான்மை இயக்கத்துக்கும், திமுகவுக்கும், கலைஞருக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடரும் தொப்புள் கொடி உறவு போன்றது என அனைவரும் இங்கே சுட்டிக்காட்டினார்கள்.

நான் சிறு வயது இளைஞனாக இருந்தபோது ஒரு கையில் குடி அரசு இதழையும் இன்னொரு கையில் தாருல் இஸ்லாம் இதழையும் வைத்துக் கொண்டு திருவாரூரில் வலம் வந்தேன் என்று கலைஞரே அடிக்கடி சொல்வார். பெரியாரைப் போலவே, என்னுள் சிந்தனை மாற்றம் ஏற்படுத்தியவர்களில் பா.தாவூத் ஷாவுக்கும் பங்குண்டு என்றும் சொல்லியிருக்கிறார்.அண்ணாவுடன் கலைஞரை இணைக்கப் பாலமாக இருந்ததே இஸ்லாமியச் சமுதாயம் தான். திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாவுக்குப் பேச வந்த அண்ணா, இந்த ஊரில் கருணாநிதி யார்? அவரை அழைத்து வாருங்கள் என்று சொல்லி அழைத்துள்ளார். இருவரும் முதன் முதலாகச் சந்திக்கக் காரணமாக இருந்தது மிலாதுநபி விழா தான்.

பள்ளிக் காலத்தில் கலைஞருக்கு உற்ற தோழனாய் இருந்து உதவி செய்தவர் அசன் அப்துல் காதர். கையெழுத்து இதழாக இருந்த முரசொலியை அச்சில் வெளியிடக் கலைஞர் திட்டமிட்டபோது அதனை அச்சிட்டுக் கொடுத்தவர் கருணை ஜமால். உள்ளூரில் எழுதிக் கொண்டு இருந்த கலைஞரைச் சேலம் மார்டன் தியேட்டர்சுக்கு அழைத்துச் சென்று மாபெரும் கதை வசன கர்த்தாவாக ஆக அடித்தளம் இட்டவர் கவிஞர் காமு ஷெரீப். கலைஞர் என்ற ஒரு தலைவரைத் தனது காந்தக் குரலால் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர் இசை முரசு நாகூர் அனீபா. இப்படி, கலைஞரின் வாழ்க்கையோடு இணைந்தும் பிணைந்தும் இருந்தவர்கள் இஸ்லாமிய தோழர்கள்.பெரியார், அண்ணா, கலைஞர், கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் படமும் இங்கே வைக்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் காயிதே மில்லத் அவர்களும் நம்முடைய தலைவர்களுடைய வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய மாபெரும் தலைவர். காயிதேமில்லத் அவர்கள் தன்னுடைய மதத்தை மட்டுமல்ல, இந்திய நாட்டையும், தாய்மொழியாம் தமிழ் மொழியையும் காப்பாற்றத் தொண்டு செய்தவர் ஆவார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தயாரிக்கும் அவையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியைக் கொண்டு வரச் சிலர் முயற்சித்தார்கள். அப்போது கடுமையாக எதிர்த்தவர் காயிதேமில்லத். இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கக் கூடாது என்று சொன்னவர் மட்டுமல்ல, தமிழைத்தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று சொன்ன தமிழ் வீரர் தான் காயிதே மில்லத். அத்தகைய தமிழ் உணர்ச்சிதான், தாய் மொழிப்பற்று தான், தமிழின உணர்வுதான் இன்றைக்கு நமக்கு முக்கியமான தேவை! இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

More News >>