அமெரிக்காவில் வன்முறை.. கடைசியாக அடங்கிய டிரம்ப்..
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் கலவரங்களுக்கு இடையே ஜோ பிடன் வெற்றி, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிரம்ப், அரசு நிர்வாகத்தை ஒப்படைப்பதாகக் கூறி, அடங்கினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்று வந்தது.
கொரோனா அச்சம் காரணமாகப் பல லட்சம் மக்கள் மெயில் ஓட்டு எனப்படும் தபால் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அவற்றை எண்ணுவதில்தான் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா, மிக்சிகன், அரிசோனா ஆகிய முக்கிய மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டது. அதே சமயம், மொத்தம் உள்ள 538 எலக்டோரல் ஓட்டுகளில் மெஜாரிட்டிக்கு 270 ஓட்டுகளைப் பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நான்கைந்து நாளில் ஜோ பிடன் 290 எலக்டோரல் ஓட்டுகளைப் பெற்று விட்டார்.
ஆனால், டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தானே வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவரது குடியரசு கட்சியினர் ஐந்தாறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, வழக்கு தொடர்ந்தனர். அவற்றிலும் டிரம்ப்புக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை.இதன்பின்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக நேற்று(ஜன.6) அறிவிக்கப்பட்டு, ஜன,20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.முன்னதாக, வெள்ளை மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்திற்குப் புறப்படும் முன்பாக தனது ஆதரவாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தனது தோல்வியை மறுத்துப் பேசியதுடன், ஆதரவாளர்களைப் போராடுமாறு தூண்டி விட்டார்.
இதையடுத்து, டிரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துத் தள்ளினர். நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் எனப்படும் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் நுழைந்து அராஜகமாக தாக்கினர். அவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தினர். பலரை அவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கைது செய்தனர். டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல நாடுகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இதற்கிடையே, இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த டிரம்ப் அடங்கினார். வெள்ளை மாளிகை நிர்வாகத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஜனவரி 20ம் தேதிக்குள் ஒப்படைப்பதாக அவர் கூறியுள்ளார். அதை வெள்ளை மாளிகை சமூக ஊடக இயக்குனர் டான் ஸ்கேவினோ வெளியிட்டுள்ளார். டிரம்ப்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதால், டான் ஸ்கேவினோ வெளியிட்டிருக்கிறார். முன்னதாக, டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப், கலவரக்காரர்களைத் தேசபக்தர்கள் என்று குறிப்பிட்டு ட்வீட் செய்தது கடும் விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து, அவர் அந்த ட்விட் பதிவை நீக்கினார்.