டெல்லி விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவும் ஆபத்து உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும், எனவே இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 6 வாரங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இதுவரை 7 முறை பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் போராட்டம் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே 8வது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று வேறு ஒரு வழக்கு விசாரணை நடந்த போது டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே வேதனை தெரிவித்தார்.டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் மேலும் கொரோனா பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. டெல்லியில் தற்போதைய சூழ்நிலையில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இது நம் அனைவரையும் கவலைப்பட வைத்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதால் டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விளக்க வேண்டும். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஊக்குவிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்றத்தின் விருப்பமாகும் என்றும் தலைமை நீதிபதி போப்டே கூறினார். மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் இருவருக்கும் இடையே விரைவில் சுமுக உடன்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்தார்.