பழனியில் கிடைத்தது பழமையான செப்பேடு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவரிடம் பழங்கால செப்பேடு ஒன்று இருந்தது. இந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த செப்பேடு உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த வெள்ளாள கவுண்டர் சமூகத்தினரால் எழுதப்பட்டது என்றும், பழனிமலைக் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு நித்யபூஜை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்து கந்தசாமி பண்டாரம் என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
1868ம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி என அந்த செப்பேட்டில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தச் செப்பேடு 152 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 25 சென்டி மீட்டர் அகலமும் ,45 சென்டிமீட்டர் உயரமும், 2 கிலோ எடையும் உள்ள இந்த இந்த செப்பேட்டை பரமேஸ்வரன் குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாகப் பாதுகாத்து வந்துள்ளனர்.