கொரோனா முழுமையாக அழிந்த பின்தான் வலிமை படம் வெளியிடா?: அஜித் தரப்பு சொல்வது என்ன?!

வலிமை படம் வெளியீடு குறித்து வெளியான தகவலுக்கு நடிகர் அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து, தளர்வுகளும் அவப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி அனுமதி அளித்தது. இருப்பினும், திரையரங்கு மூடப்பட்டதால், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம், சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியாகின.

இதற்கிடையே, நேற்று முன்தினம் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை நடிகர் அஜித் தொடர்பு கொண்டு, படம் பார்க்க ரசிகர்கள் திரையரங்கு வந்தால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, கொரோனா முழுமையாக சரியாகும் வரை வலிமை திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் அஜித் தரப்பு, வலிமை படம் வெளியீடு தொடர்பாக வெளியாகும் செய்திகள் போலியானது. அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் வலிமை திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாளான வரும் மே-1 ம் தேதி வலிமை படத்தினை வெளியிடுவதாக திட்டமிடப்பட்டது. தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் படம் என்றால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது என்பது கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

More News >>