80 எருமை, 45 பசு... ரூ.1.10 கோடிக்கு பால் விற்பனை செய்த குஜராத் பெண்!
குஜராத் மாநிலத்தில் 2020-ம் ஆண்டு மட்டும் ரூ.1.10 கோடிக்கு பால் விற்று 62 வயது பெண் சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் நாகனா கிராமத்தைச் சேர்ந்த நவல்பென் தல்சங்பாய் சவுத்ரி என்ற 62 வயது பெண், பால் விற்பனையில் புரட்சி செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். எதற்காக என்றால், கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் ரூ 1.10 கோடி மதிப்புக்கு பாலை விற்று ஒவ்வொரு மாதமும் ரூ 3.50 லட்சம் நவல்பென் லாபம் ஈட்டியுள்ளார்.
உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு சாதனை படைத்த நவல்பென்னை தற்போது இணைதளத்தில் அதிகம் பேர் தேடி வருகின்றனர். இது குறித்து நவல்பென் கூறுகையில், எனக்கு 4 மகன்கள் உள்ளனர். மகன்கள் நகரங்களில் படித்து வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைவிட குறைந்த அளவில்தான் சம்பாதிக்கிறார்கள். தற்போது 80 எருமைகள், 45 பசு மாடுகள் கொண்ட ஒரு பால்பண்ணை நடத்துகிறேன்.
2019-ம் ஆண்டு ரூ 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்று பனஸ்கந்தா மாவட்டத்தில் முதல் இடத்தில் இருந்தேன். 2020-ம் ஆண்டு ரூ.1 கோடி 10 லட்சம் மதிப்புள்ள பாலை விற்பனை செய்வதன் மூலம் இந்த ஆண்டும் முதலிடத்தில் இருக்கிறேன் என்றார். நவல்பென்னிடம் தற்போது 15 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள், அவரது பால் விற்பனை சாதனை பனஸ்கந்தா மாவட்டத்தில் இரண்டு லட்சுமி விருதுகள் மற்றும் மூன்று சிறந்த பசுபாலக் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.