புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி.. மயங்கிய மூதாட்டியை காப்பாற்றிய சிறுவர்கள்!
பொங்கல் பரிசு வாங்க சென்றபோது மயங்கி விழுந்த மூதாட்டியை இழுவை வண்டியில் ஏற்றிச்சென்ற சிறுவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான சுப்புலெட்சுமி என்ற மூதாட்டி, தமிழக அரசின் பொங்கல்பரிசு தொகுப்பு பெற வேண்டி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன்கடைக்கு நடந்தே சென்றிருக்கிறார்.
ஒரு கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரமாக நடக்கமுடியாமல் சென்ற மூதாட்டி திடீரென பாதி வழியிலேயே மயங்கி விழுந்தார். சாலையோரம் சுருண்டு கிடந்த மூதாட்டியை பார்த்த இரு சிறுவர்கள், தனது வீட்டில் கிடந்த இழுவை வண்டியில் மூதாட்டியை ஏற்றி அவருடைய வீட்டில் கொண்டு சேர்த்துள்ளனர்.
சிறுவர்களின் இந்த செயல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது. இந்தச் செய்தியைப் பார்த்து பலரும் அந்தச் சிறுவர்களை பாராட்டி வருகின்றனர். மேலும், கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், தனிப்பிரிவு போலீசார் இசக்கியா மற்றும் அவரது குழுவினர் சிறுவர்களின் வீட்டுக்குச் நேரில் சென்று இனிப்பு வழங்கி பாராட்டியதுடன் ரொக்கப்பரிசுகளையும் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, மூதாட்டியின் நிலையறிந்த அதிகாரிகள், வரும் காலங்களில் ரேஷன் பொருட்களை அந்த மூதாட்டியின் வீட்டிற்கே சென்று வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.