இந்த வருடம் அகத்தியர் மலைக்கு செல்ல கட்டுப்பாடு கூடுதல் பணம் கட்டினால் போகலாம்
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் உள்ள அகத்தியர் மலைக்கு இந்த வருட பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூடுதல் பணம் கட்டினால் அங்கு செல்லலாம். தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அகத்தியருக்கு ஒரு கோவில் உள்ளது. இந்த கோவில் உள்ள பகுதி கேரள வனப் பகுதியாகும். இங்கிருந்து தான் தாமிரபரணி நதி உருவாவதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த மலைக்கு நெல்லை மாவட்டம் பாபநாசம் வழியாக ஏராளமானோர் நடந்து செல்வது உண்டு. மிகக் கடினமான செங்குத்தான பாதை வழியாகத் தான் அகத்தியர் மலைக்கு செல்ல முடியும். இங்கு செல்லும் பக்தர்கள் அகத்தியர் கோவிலில் சாமி கும்பிட்டு பொங்கல் வைப்பது உண்டு.
சிவராத்திரி தினத்தன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளுக்கு நாள் இங்கு செல்லும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து வனப்பகுதி அசுத்தமாக தொடங்கியது. இதையடுத்து தமிழகம் வழியாக செல்லும் பாதையை கேரள வனத்துறை மூடியது. இதனால் அகத்தியர் மலைக்கு செல்ல விரும்புபவர்கள் திருவனந்தபுரம் சென்று வனத்துறையிடம் சிறப்பு பாஸ் வாங்கித் தான் செல்ல முடியும். தற்போது ஆன்லைனிலேயே பணம் கட்டி பாஸ் வாங்கலாம். வருடந்தோறும் ஜனவரி 14ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதத்தில் சிவராத்திரி வரை இங்கு செல்லலாம். தினமும் 100 பேர் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஒரு நபருக்கு 1,100 கட்டணம் ஆகும். இங்கு சென்று வர 3 நாட்கள் ஆகும். வனத்துறை சார்பில் ஒரு வழிகாட்டியும் உடன் வருவார்.
இந்நிலையில் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடங்களைப் போல அதிக எண்ணிக்கையில் அகத்தியர் மலைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் 45 பேருக்கு அனுமதி அளிக்கப்படும். 10 பேர் கொண்ட குழுவுக்கு 28,000 ரூபாயும், 5 பேர் கொண்ட குழுவுக்கு 16,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை கட்டினால் இங்கு செல்லலாம். கடந்த வருடம் முதல் இங்கு செல்ல பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே அகத்தியர் கோயிலில் பூஜை செய்யவும், பொங்கல் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.