இன்னும் 12 நாட்களில் பதவியிழக்கும் டிரம்ப்.. வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார்..
அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் நடந்த தனது ஆதரவாளர்களின் வன்முறைச் செயல்களுக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 நாட்களில் பதவியிழக்கும் டிரம்ப், ஆட்சியை ஒப்படைக்கத் தயாராகியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர்.
மொத்தம் உள்ள 538 எலக்டோரல் ஓட்டுகளில் மெஜாரிட்டிக்கு 270 ஓட்டுகளைப் பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நான்கைந்து நாளில் ஜோ பிடன் 310 எலக்டோரல் ஓட்டுகளைப் பெற்று விட்டார். ஆனால், டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தானே வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவரது குடியரசு கட்சியினர் ஐந்தாறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, வழக்கு தொடர்ந்தனர். அவற்றிலும் டிரம்ப்புக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை.
இதன்பின்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாகக் கடந்த 6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன,20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.முன்னதாக, வெள்ளை மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்திற்குப் புறப்படும் முன்பாக டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தனது தோல்வியை மறுத்துப் பேசியதுடன், ஆதரவாளர்களைப் போராடுமாறு தூண்டி விட்டார். இதையடுத்து, டிரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துத் தள்ளினர். நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் எனப்படும் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் நுழைந்து அராஜகமாகத் தாக்கினர்.இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வன்முறைச் சம்பவங்களுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அடுத்த நாட்டுக்குள் குழப்பம் ஏற்பட்டால், தானாகவே அங்கு நுழைந்து பஞ்சாயத்துப் பண்ணும் அமெரிக்காவுக்கு இந்த கதியா? என்று கிண்டல் பேச்சுகளும் எழுந்தன.
இதற்கு மேலும் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த டிரம்ப், தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டார். அவர் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கேபிடல் கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை மற்ற அமெரிக்கர்களைப் போல் நானும் கண்டிக்கிறேன். வெள்ளை மாளிகையில் புதிய நிர்வாகம் வரும் 20ம் தேதி துவங்கப் போகிறது. அரசு நிர்வாகத்தைச் சுமுகமாகவும், முறையாகவும் ஒப்படைப்பதில்தான் எனது இப்போதைய கவனம் உள்ளது. நாம் இப்போது ஆறுதல் கொள்ள வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டார்.டிரம்ப் தனது பேச்சில், புதிய அதிபர் ஜோ பிடன் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. கடந்த முறை ஜனநாயகக் கட்சி தோற்று டிரம்ப் வெற்றி பெற்ற போது, அப்போதைய அதிபர் ஒபாமா, டிரம்ப்புக்கு வாழ்த்துக் கூறி அமைதியாக நிர்வாகத்தை ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.