கேரள சட்டசபையில் எதிர்கட்சியினர் கடும் ரகளை கவர்னரின் உரையை புறக்கணித்தனர்
கேரள சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. கவர்னரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் ஆரிப் முகம்மது கானின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் டாலர் கடத்தல் வழக்கில் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் பெயரும் அடிபட்டதால் அவர் பதவி விலகக் கோரி ஏற்கனவே எதிர்க்கட்சிகள் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதனால் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் கடும் அமளி ஏற்படும் என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. காலை 9 மணி அளவில் சபாநாயகர் ஆரிப் முகம்மது கான் உரை நிகழ்த்துவதற்காகச் சட்டசபைக்கு வந்தார். அவரை முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் உரையை வாசிக்கத் தொடங்கினார். ஆனால் கவர்னரை உரை வாசிக்க விடாமல் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முதல்வர் மற்றும் சபாநாயகரைக் கண்டித்து எழுதப்பட்ட பேனர்களையும் சபைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால் கவர்னர் ஆரிப் முகம்மது கானால் உரையை வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 15 நிமிடங்களுக்கு மேல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை கவர்னர் கண்டித்தார். நான் எனது கடமையை செய்யவேண்டும், அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் கவர்னரின் உரையை புறக்கணித்து அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இதன் பிறகு தான் கவர்னர் ஆரிப் முகமது கான் தன்னுடைய உரையை வாசிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையே சபையிலிருந்து வெளியேறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தலைமையில் சட்டசபை வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், கேரள அரசு மீதான மக்களின் எதிர்ப்பை காட்டுவதற்காகவே சபையில் போராட்டம் நடத்தியதாகக் குறிப்பிட்டார். இதற்கிடையே சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் பதவி விலகக் கோரி சட்டசபைக்கு முன் பாஜகவினரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டசபைக்குள் நுழைய முயன்றதால் போலீசார் அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சட்டசபை முன்பும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.