தமிழகத்தில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. மத்திய அமைச்சர் ஆய்வு..
தமிழகத்தில் 2ம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று(ஜன.8) நடைபெற்று வருகிறது. இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 4 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, இந்திய அரசும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது.இதன்படி, நாடு முழுவதும் கடந்த 2ம் தேதியன்று 125 மாவட்டங்களில் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
தமிழகத்தில் சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று 2ம் கட்டமாக நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இது நடைபெறுகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்று வரும் தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:இந்தியாவில் குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து ஆய்வு செய்திருக்கிறோம். முதல் கட்டமாக 125 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இன்று 2ம் கட்டமாக நாடு முழுவதும் 3 மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்கப்படும்.நாட்டில் போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காகத் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, வரும் 17ம் தேதி போலியோ முகாம்கள் நடத்தப்படவுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட வேறு சில மையங்களிலும் அவர் ஆய்வு செய்யவிருக்கிறார். அதன்பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது தமிழகத்துக்குத் தேவையான கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.