மம்மூட்டியின் வீட்டுக்கு விருந்து சென்ற மோகன்லால்
கொச்சியில் உள்ள நடிகர் மம்மூட்டியின் வீட்டுக்கு மோகன்லால் விருந்து சென்றார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழ் சினிமாவில் கமலும், ரஜினியும் போல மலையாள சினிமாவில் மம்மூட்டியும், மோகன்லாலும் சூப்பர் நடிகர்களாக உள்ளனர். ஆனால் தமிழில் கமலும், ரஜினியும் இணைந்து நடித்த படங்களை விட மலையாளத்தில் மோகன்லாலும், மம்மமூட்டியும் சேர்ந்து மிக அதிக படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து இதுவரை 55 படங்களில் நடித்துள்ளனர். நம்பர் 20 மதராஸ் மெயில் என்ற படத்தில் மம்மூட்டி நடிகராகவே வருவார்.
இதேபோல படயோட்டம், அதிராத்ரம், ஹரிகிருஷ்ணன்ஸ், நரசிம்மம், அடிமைகள் உடமகள் உட்பட 55 படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். கடைசியாகக் கடந்த 2008ல் வெளிவந்த டுவென்டி டுவென்டி என்ற படத்தில் தான் இருவரும் சேர்ந்து நடித்தனர். மலையாள நடிகர் சங்கம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் மலையாள சினிமாவில் பெரும்பாலான நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
மேலும் இருவரும் தங்களுக்கு இடையே ஈகோ எதுவும் பார்ப்பதில்லை என்பது தான் சிறப்பம்சமாகும். இருவரும் தங்களுக்கு வரும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதும் உண்டு. இந்நிலையில் மோகன்லால் நேற்று கொச்சியில் உள்ள மம்மூட்டியின் வீட்டுக்குச் சென்றார். மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர் மதிய உணவு சாப்பிட்டார். நீண்ட நேரம் மம்மூட்டியின் வீட்டில் நேரத்தைச் செலவழித்து பின்னர் தான் மோகன்லால் திரும்பினார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோக்களை இருவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.