பற்றி எரியும் கட்சி உட்பூசல் | தங்கபாலு Vs மோகன் குமாரமங்கலம்

தமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்களை நியமித்தது. அது தொடர்ந்து ஏற்கனவே கசிந்து கொண்டு இருக்கும் உட்கட்சி பூசல், பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிதாக 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள் ,104 செயலாளர்கள் மற்றும் 39 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி ஒன்றையும் பதவியில் அமர்த்தியுள்ளது. இந்த " ஜம்போ கமிட்டி " எந்த வகையிலும் பலனளிக்காது என கார்த்தி சிதம்பரம் விமர்சித்தது துவங்கி பல்வேறு பிரச்சனைகள் தமிழக காங்கிரஸ் கட்சியை சூழ்ந்துள்ளது. அந்த வகையில் தங்கபாலு அவர்களின் தனிப்பட்ட பலன்களுக்காக மற்றும் இன்னும் சிலரின் செல்வாக்கின் பிரதிபலிப்பாக புது கமிட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது என கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்,தனது சமீபத்திய பேட்டியில் " மழைக்கு கூட சத்தியமூர்த்தி பவன் பக்கம் ஒதுங்காத தங்கபாலு அவர்களின் மகனுக்கு தலைமை பதவி வழங்கப்பட்டது வேதனை அளிக்கிறது " என கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்கள் இருக்கையில், அதிகாரத்தை பயன்படுத்தி பதவிகளை சுவீகரித்தது, அந்த கட்சியை சின்னாபின்னமாகும் என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள். தமிழக அரசியலில் அமெரிக்காவின் MIT பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் இரண்டே பேர் தான். ஒன்று திமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு தலைமை தாங்கும் PTR பழனிவேல் தியாகராஜன் எம் எல் ஏ மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம்.

இந்த முறை மோகன் குமாரமங்கலம் அவர்களின் ஆதரவாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கட்சி பிரமுகர்கள் சார்பில் பேசப்படுகிறது. ஏற்கனவே தங்கபாலு மற்றும் மோகன் குமாரமங்கலம் இருவருக்கும் வெளிப்படையாகவே உட்கட்சி பூசல் இருப்பது குறிப்பிடத்தக்கது. படித்தவர்களையும் உழைத்தவர்களையும் தமிழக காங்கிரஸ் மறந்து விட்டது என்ற பேச்சு கட்சிக்குள்ளேயே வந்துள்ளது. இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒரு பேரியக்கம் கட்சி உட்பூசல்களில் சிதறுண்டு போவது அரசியல் சதுரங்கத்தின் கோரமான முகத்தை காட்டுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்கு இப்படி ஒரு பிரச்சனை என்றால், அகில இந்திய காங்கிரஸ் தலைமை பொறுப்பு கேட்பாரின்றி கவலைகிடமாக உள்ளது. ராகுலின் செவிகளுக்கு தமிழக குரல்கள் கேட்குமா ?

More News >>