அதிமுக பொதுக்குழுவில் சசிகலா வருகை பேசப்படுமா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு..

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நாளை(ஜன.9) நடைபெறுகிறது. இதில் சசிகலா வருகை பற்றியும், கட்சியில் அவருக்கு இடம் உண்டா என்பது பற்றியும் பேசப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்டி, அதன் அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதிமுகவின் பொதுக்குழு கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூட்டப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை(ஜன.9) கூடுகிறது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 302 பேர் பங்கேற்கிறார்கள். அதே போல், பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை வந்து ஒரு அரசு விழாவில் பங்கேற்ற போது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் அறிவித்தனர். அதே போல், நாடாளுமன்றத் தேர்தலின் போது இருந்த அதே கூட்டணி தொடரும் என்றும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

எனினும், பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை தாங்களும் ஏற்பதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வரும் 14ம் தேதி பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சென்னைக்கு வருகிறார். அதற்குள் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எட்டப்படும் என்ற பேச்சு உலா வருகிறது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி பற்றியும், முதல்வர் வேட்பாளர் பற்றியும் காரசாரமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அதே போல், சசிகலா வரும் 27ம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகிறார். அவர் சிறைக்கு போகும் முன்பு, அதிமுகவின் பொதுச் செயலாளராக சென்றிருந்தார். ஆனால், அதன் பின்பு கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

எனவே, சசிகலா வருகை பற்றியும், கட்சியில் அவருக்கு இடம் உண்டா என்பது தொடர்பான நிலைப்பாடு குறித்தும் பொதுக்குழுவில் பேசப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது. அதிமுகவில் சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலீப்பர் செல்களாக இருப்பது உண்மையானால், அவர்களால் பொதுக்குழுவில் பரபரப்பான காட்சிகள் இடம் பெறலாம் என்றும் பேசப்படுகிறது. அப்படி பரபரப்பான காட்சிகள் இடம்பெறுமா அல்லது குறிப்பிட்ட சிலரை மட்டும் பேச வைத்து கட்டுக்கோப்பாக கூட்டத்தை முடித்து விடுவார்களா என்பது நாளை தெரியும். நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு ராகுகாலம் தொடங்குகிறது. அதனால், அதற்கு முன்பாக காலை 8.50 மணிக்கு செயற்குழு, பொதுக் குழு கூட்டங்களை தொடங்கவுள்ளனர்.

More News >>