அரை சதம் அடித்த சுப்மான் கில்

இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியத் தொடக்க வீரர் சுப்மான் கில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு வெளியே மிகக்குறைந்த வயதில் அரை சதம் அடிக்கும் 4வது இந்திய வீரர் என்ற பெருமை கில்லுக்கு கிடைத்துள்ளது.2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் என்ற நிலையில் இன்று 2வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியது. இந்திய பவுலர்களின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியா தன்னுடைய முதல் இன்னிங்சில் 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டீவன் ஸ்மித் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 131 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதற்கு அடுத்தபடியாக சிறப்பாக ஆடிய லபுஷேனுக்கு 9 ரன்களில் சதம் கைநழுவியது.

இவர் 91 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவின் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்தியத் தரப்பில் ஜடேஜா அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இருவரும் மிகவும் கவனத்துடன் பேட்டிங் செய்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா 26 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார்.சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த சுப்மான் கில் 50 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இன்றைய போட்டியில் அரை சதம் அடித்ததின் மூலம் கில் இன்று ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதில் இந்தியாவுக்கு வெளியே அரைசதம் அடித்த நான்காவது தொடக்க வீரர் என்ற பெருமை 21 வயதான கில்லுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன் தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, பிரித்வி ஷா மற்றும் மாதவ் ஆப்தே ஆகியோர் இளம்வயதில் இந்தியாவுக்கு வெளியே அரை சதம் அடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் ரவிசாஸ்திரி தான் முதலிடத்தில் உள்ளார். இந்தியா இன்று ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 9 ரன்களுடனும் கேப்டன் ரஹானே 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

More News >>