மோசடிக்கு தப்ப வேண்டுமா? இந்த 7 செயலிகளும் வேண்டாம்!

வாடிக்கையாளர் சேவை மோசடிகள் இந்தியாவில் இணைய பயனர்களுக்கு பெரிய தொல்லையாக உருவெடுத்துள்ளது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணை ஒருவர் கூகுளில் தேடினால், தேடல் முடிவாக சில எண்கள் தெரியும். அவற்றுள் மோசடி எண்களும் இருக்கக்கூடும். நம்பிக்கையான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண் என்று பயனர் நம்பி, அதை தொடர்பு கொண்டால் மோசடியாளர்களிடம் அவர் சிக்கிக் கொள்ளுகிறார். இதுபோன்று தொடர்பு கொள்ளும் மக்களிடம் மோசடி பேர்வழிகள், சில செயலிகளை (app) அவர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டவுண்லோடு செய்யும்படி கூறுவர். ரிமோட் டெஸ்க்டாப் ஆப்ஸ் (remote desktop apps) என்னும் இந்த செயலிகள் உண்மையிலே பயனுள்ளவை.

ஆனால், இவை எதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்று அறியாத மக்கள், பயனுள்ள இந்த செயலிகளை தங்கள் போன்களில் தரவிறக்கம் செய்து, அதை மோசடி பேர்வழிகள் தவறாக உபயோகிக்க வழி கோலுகின்றனர். மக்களின் அறியாமையை பயன்படுத்தி, அந்தச் செயலிகளை தவறான நோக்கத்தில் பயன்படுத்தி பயனர்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி பேர்வழிகள் பணத்தை திருடி விடுகின்றனர். தொலைவிலிருந்து கணிணியை கட்டுப்படுத்தக்கூடிய நல்ல செயலிகள் மூலமாகவே மோசடி செய்கின்றனர்.உண்மையில் இந்தச் செயலிகள் (remote desktop apps) மோசடியானவை அல்ல. அவை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுபவை.

ஆனால், டிஜிட்டல் உலகை பற்றி சரியான புரிதல் இல்லாத ஜனங்கள், மோசடி பேர்வழிகளிடம் ஏமாந்து போகிறார்கள். ஒரு கணிணியை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி வேலை செய்ய பயன்படும் தொழில்நுட்பத்தை மோசடி பேர்வழிகள் தவறான நோக்கத்தில் உபயோகித்து வங்கி கணக்கு பயனர் எண், கடவுச்சொல் அல்லது யூபிஐ பயனர் விவரங்கள், ஓடிபி போன்றவற்றை அறிந்து பணத்தை திருடுகிறார்கள். எந்த நல்ல நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவினரும் எந்த ஒரு செயலியையும் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் டவுண்லோடு செய்யும்படி கூற மாட்டார்கள். யாராவது உங்களை கீழ்க்காணும் செயலிகளை டவுண்லோடு செய்யும்படி கூறினால் அவர் மோசடி பேர்வழி என்று உஷாராகிவிடுங்கள்.

டீம்வியூவர் குயிக்சப்போர்ட் (TeamViewer QuickSupport)டீம்வியூவர் குயிக்சப்போர்ட் என்பது தகவல் தொழில்நுட்ப மேலாளர்களால் பயன்படுத்தப்படும் பொதுவான ஒரு செயலியாகும். தொலைவிலிருந்து போன்கள் மற்றும் கணிணிகளை கட்டுப்படுத்த இதை பயன்படுத்துவர். இது எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள செயலியாகும். ஆனால் மோசடி பேர்வழிகள் இதை பயன்படுத்தியே வங்கி கணக்குக்கான நுழைவு விவரங்கள், ஓடிபிக்களை களவாடுகின்றனர்.

மைக்ரோசாஃப்ட் ரிமோட் டெஸ்க்டாப் (Microsoft Remote desktop) மைக்ரோசாஃப்ட் ரிமோட் டெஸ்க்டாப் என்னும் செயலி தொலைவிலிருக்கும் கணிணியுடன் அல்லது மெய்நிகர் (virtual) செயலிகளுடன் தொடர்பு கொள்ள உதவுவதாகும். இதுவும் டீம்வியூவர் குயிக்சப்போர்ட் போன்றே வேலை செய்கிறது. தொலைதூர கணிணி செயலிகள் (remote desktop app) வேலை செய்யும் விதத்தை அறியாதவர்களை இந்த செயலியை கொண்டே மோசடிபேர்வழிகள் ஏமாற்றுகின்றனர்.

எனிடெஸ்க் ரிமோட் கண்ட்ரோல் (AnyDesk Remote Control)வணிக பயனர்கள் அதிகமாக பயன்படுத்தும் செயலி இது. ஆனால் மோசடி பேர்வழிகள், இந்த எனிடெஸ்க் ரிமோட் கண்ட்ரோல் செயலியை தரவிறக்கம் செய்யும்படி கூறி, குறிப்பிட்ட நபரின் ஸ்மார்ட்போனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விவரங்களை கண்டுகொண்டு பணத்தை திருடுகின்றனர்.

ஏர்டிராய்ட்: ரிமோட் அக்சஸ் அண்டு ஃபைல் (AirDroid: Remote access and File)இதுவும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான இன்னொரு செயலியாகும். இது எப்படி வேலை செய்கிறது என்பதை அறியாவிட்டால் இதை பயன்படுத்தவேண்டாம்.

ஏர்மிரர்: ரிமோட் சப்போர்ட் அண்டு ரிமோட் கண்ட்ரோல் டிவைசஸ் (AirMirror: Remote support and Remote control devices) எங்கோ தொலைவில் இருக்கும் கணிணியிலிருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்த உதவக்கூடிய செயலி இது. அறியாத நபர் ஒருவர் எங்கோ இருந்து இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுண்லோடு செய்யும்படி கூறினால் மறுத்துவிடுங்கள்.

குரோம் ரிமோட் டெஸ்க்டாப் (Chrome Remote Desktop)தொலைதூர பயன்பாட்டுக்கென கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செயலி இது. இது மிகவும் பயனுள்ளது. ஆனால், தவறான மனிதர்கள் கையில் சென்றால் உங்கள் பணம் அம்போதான். ஆகவே, அறிமுகமில்லாத நபர்கள் கூறினால் இந்தச் செயலியை தரவிறக்கம் செய்யவேண்டாம்.

ஸ்பிலாஷ்டாப் பர்சனல் - ரிமோட் டெஸ்க்டாப் (Splashtop Personal - Remote Desktop)மோசடி நபர்கள் இந்த செயலியையும் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, நேரடியாக இந்த செயலியை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்காவிட்டால் யார் கூறினாலும் இதை உங்கள் ஆண்ட்ராய்டு போனில் டவுண்லோடு செய்யவேண்டாம். நாம் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே மோசடியிலிருந்து தப்பிக்கக்கூடிய காலகட்டத்தில் வசிக்கிறோம். ஆகவே, கவனமாக இருப்போம்.

More News >>