அமெரிக்க அதிபரின் ட்விட்டர் பக்கம் நிரந்தர முடக்கம்.. டிரம்ப் ஆத்திரம்..

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் பக்கங்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டது. கருத்து சுதந்திரத்தை ட்விட்டர் நிறுவனம் தடுப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாகக் கடந்த 6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றியை அறிவிக்காமல் தடுக்கும் வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். டிரம்ப் தனது தோல்வியை மறுத்துப் பேசியதுடன், ஆதரவாளர்களைப் போராடுமாறு தூண்டி விட்டிருந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலவரத்திற்கு இடையே ஜோ பிடன் வெற்றி அறிவிக்கப்பட்டு விட்டதால், இதற்கு மேலும் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த டிரம்ப், தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டார்.

இதற்கிடையே, டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவாளர்களைத் தூண்டி விடும் வகையில் ட்விட்களை பதிவிட்டதால், அவரது ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கி வைத்தது. இதையடுத்து, டிரம்ப் தனது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து சில பதிவுகளை வெளியிட்டார்.அதில் அவர், ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து சுதந்திரமான பேச்சுகளைத் தடுத்து வருகிறது என்று நான் ஏற்கனவே சொல்லி வந்தேன். ட்விட்டர் நிறுவன ஊழியர்கள், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து என்னை வாய் மூடச் செய்வதற்காக எனது பக்கத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஆனால், நீங்கள் ஏழரை கோடி பேர் கிரேட்.. எனக்கு வாக்களித்த தேசபக்தர்கள்.

ட்விட்டர் தனியார் நிறுவனமாக இருக்கலாம். ஆனால், பிரிவு 230ன் கீழ் அரசு அனுமதி இல்லாமல் அவர்கள் இயங்க முடியாது. நான் இதை எதிர்பார்த்து பல்வேறு தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமக்கென ஒரு பொதுத் தளத்தை வருங்காலத்தில் உருவாக்குவோம். ட்விட்டர் சுதந்திரமான கருத்துகளுக்கு ஏற்றதல்ல. அவர்கள் பிரிவினைவாதிகளுடன் இணைந்து விட்டார்கள்.. என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால், அந்த ட்விட்களும் சில நிமிடங்கள் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிரம்ப்பின் ட்விட்டர் பக்கங்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது.

More News >>