இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆஸ்திரேலியா 94 ரன்கள் முன்னிலை
சிட்னியில் நடந்து வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று 244 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியத் தரப்பில் 3 பேர் ரன் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே சிட்னியில் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாசில் வெற்றி பெற்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 338 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த அணியில் ஸ்டீவன் ஸ்மித் அபாரமாக ஆடி 131 ரன்கள் குவித்தார்.
இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா அற்புதமாகப் பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் பின்னர் நேற்று இந்தியா தனது முதல் இன்னிங்சை ஆட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மான் கில்லும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடிய போதிலும், ரோகித் சர்மா 26 ரன்களிலும், சுப்மான் கில் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 ரன்களுடனும், கேப்டன் ரகானே 5 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது.
ஆஸ்திரேலிய பவுலர்களின் அனல் பறக்கும் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆனாலும் புஜாரா சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அவர் 50 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரகானே 22 ரன்களிலும், ஹனுமா விஹாரி 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறப்பாக ஆடி 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அஷ்வின் 10 ரன்களிலும், நவ்தீப் செய்னி 3 ரன்களிலும், பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும், சிராஜ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்தியா 244 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜடேஜா 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியத் தரப்பில் ஹனுமா விஹாரி, அஷ்வின் மற்றும் பும்ரா ஆகிய 3 பேரும் ரன் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை ஆட தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னரும், புகோவ்ஸ்கியும் களம் இறங்கியுள்ளனர்.