பேட்டிங்கின் போது ரிஷப் பந்த் காயம் விருத்திமான் சாஹா களமிறங்கினார்
இந்திய வீரர்கள் காயமடைவது தொடர்கிறது. ரிஷப் பந்த் இன்று பேட்டிங் செய்யும் போது கம்மின்சின் பவுன்சர் அவரது இடது கையை பதம் பார்த்தது. இதனால் இன்று அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக விருத்திமான் சாஹா களமிறங்கியுள்ளார்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னியில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் பின்னர் ஆடிய இந்தியா 244 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன் பின்னர் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. நேற்று ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 ரன்களிலும், கேப்டன் ரகானே 5 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்று ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நன்றாக ஆடிக்கொண்டிருந்த போது கம்மின்ஸ் வீசிய ஒரு பவுன்சர் அவரது இடது கையை பதம் பார்த்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். உடனடியாக மருத்துவர் விரைந்து சென்று அவருக்குச் சிகிச்சை அளித்தார். இதன் பின்னர் அவரால் ஒழுங்காக ஆட முடியவில்லை. 36 ரன்களில் அவர் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு உடனடியாக கையில் ஸ்கேனிங் செய்யப்பட்டது. வலி குறையாததால் இன்று ரிஷப் பந்த் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக விருத்திமான் சாஹா களமிறங்கினார். ஏற்கனவே இந்திய அணியில் முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் ஆஸ்திரேலிய போட்டியின் போது காயமடைந்து வெளியேறினர். அவர்களுக்கு முன்பாக ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் காயமடைந்தனர். அடுத்தடுத்து இந்திய வீரர்கள் காயமடைவது இந்திய அணிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.