வலுவான நிலையில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள்
சிட்னி டெஸ்ட் போட்டியில் தற்போது ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் தற்போது ஆஸ்திரேலியா இந்தியாவைவிட 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்பின்னர் ஆடிய இந்தியா, ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 244 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தியத் தரப்பில் சுப்மான் கில் மற்றும் புஜாரா ஆகியோர் மட்டுமே நன்றாக ஆடினர். இவர்கள் இருவரும் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த கேப்டன் ரகானே 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்த இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சிறப்பாக ஆடவில்லை. அவர் 13 ரன்கள் எடுத்திருந்த போது அஷ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான புக்கோவ்ஸ்கியின் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றினார். இவர் 10 ரன்களில் அவுட்டானார். 35 ரன்களில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இந்திய தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதன் பின்னர் ஜோடி சேர்ந்த லபுஷேனும், ஸ்மித்தும் சிறப்பாக ஆடினர்.
இதையடுத்து இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 8 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. நாளை 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. நாளைய போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களைக் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க வைத்தால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும்.