செயின் திருடர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி? அனுபவப்பட்ட அம்மணி சொல்கிறார்
தமிழகத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்காத நாட்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தினமும் ஆங்காங்கே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இருப்பினும் செயின் அணிந்து செல்லும் பெண்கள் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சென்னையில் இன்று செயின் திருடும் திருடர்களிடமிருந்து தப்பிய பெண்மணி ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்.
சென்னை, தி.நகர் ராஜாம்பாள் தெருவைச் சேர்ந்த சத்தியநாராயணனின் மனைவி சாதனா (49). நேற்று காலை சென்னை தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ரோட்டில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வேகமாக வந்த மர்ம நபர்கள் சாதனாவின் கழுத்தில் கிடந்த தாலியைப் பறிப்பதற்காக இழுத்துள்ளார்.ஆனால் நகை அறுபடாமல் போனதால் கொள்ளையன் கையில் சிக்கவில்லை. கொள்ளையன் இழுத்ததில் சாதனா மட்டும் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவரது முழங்கால், கைளில் லேசான காயங்கள் ஏற்பட்டன. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார்.நகை பறிக்க முயன்ற கொள்ளையன் குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சாதனா வீடியோ மூலம் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வாட்ஸ் அப்பில் பதிவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில் சாதனா , நான் எனது தங்கச்செயினை மஞ்சள் கயிறுடன் சேர்த்துக் கட்டியிருந்ததால் கொள்ளையர்களால் அதனை அறுக்க முடியவில்லை. என்னைக் கீழே தள்ளி விட்டு விட்டு சிறிது தூரம் சென்று திரும்பிப்பார்த்தனர். அவர்கள் முதுகில் இருந்து நீளமான வாளை உருவி மிரட்டினார்கள். பின்னர் எனது அருகில் ஆட்கள் வந்ததும் தப்பி ஓடி விட்டனர். அதிகாலையில் வாக்கிங் செல்பவர்கள் இது போன்ற நபர்களிடம் உஷாராக இருங்கள். என்று தெரிவித்துள்ளார்.