பேஸ்புக் நேரலையில் தொழிலாளி தற்கொலை முயற்சி தக்க சமயத்தில் நண்பர்கள் காப்பாற்றினர்
பேஸ்புக் நேரலையில் தோன்றி தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்க சமயத்தில் அவரது நண்பர்கள் தலையிட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. திருவனந்தபுரம் அருகே இந்த சம்பவம் நடந்தது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கொச்சுவேளி என்ற இடத்தில் இங்கிலீஷ் இந்தியன் களிமண் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடும் நஷ்டம் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். நிறுவனத்தை திறக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பிரபுல்ல குமார் (50) என்பவர் தொழிற்சாலைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அவரது மனைவி மகேஸ்வரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 42 வயதான அருண் என்ற ஒரு தொழிலாளி பேஸ்புக் நேரலையில் தோன்றி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள மாதவபுரம் என்ற இடத்தை சேர்ந்த இந்த தொழிலாளி கடந்த 15 வருடங்களாக களிமண் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு வேலை பறிபோனதால் குடும்பத்தை நடத்த பெரும் சிரமப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பேஸ்புக் நேரலையில் தோன்றிய இவர், களிமண் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், நிறுவனத்தை மீண்டும் திறக்க கோரியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினார். இதைப் பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு போன் செய்து விவரத்தைக் கூறினர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தொழிலாளியின் வீட்டினர், அறையை பூட்டி தற்கொலைக்கு முயற்சித்த அந்த நபரை கதவை உடைத்து மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் தூக்கில் தொங்கி விட்டார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் நேரலையில் தோன்றி தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.