பாடகிக்கு 2வது திருமணம் செய்து வைத்த பிள்ளைகள்..
திரையுலகம் மாய உலகம் என்பதுபோல் அதில் நடிக்கும் பல நட்சத்திரங்களின் வாழ்வும் மாயமாகவே இருக்கிறது. காதல், திருமணம், வழக்கம்போல் நடந்தாலும் விவகாரத்தும் அடிக்கடி நடக்கிறது. நடிகர், நடிகைகளுக்குள் மட்டுமல்லாமல் பாடகிகள், பெண் கவிஞர்கள் வாழ்விலும் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் நேர்கிறது. நடிகர் பிரபுதேவா ராணி லதா என்பவரை கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தனர். பின்னர் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் பிசியோதெரபி டாக்டர் ஒருவரை சமீபத்தில் பிரபு தேவா 2வதாக செய்துக்கொண்டார். இது ரகசிய திருமணமாக நடந்தது. அதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜ் முன்னதாக லலிதாகுமாரியை மணந்தார்.
இவர்களுக்கும் குழந்தைகள் பிறந்தது. ஆனால் கடந்த 2009ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர் 2010 ம் ஆண்டு இந்தி திரையுலக நடன இயக்குனர் போனி வர்மா என்பவரை மணந்துக்கொண்டார் பிரகாஷ் ராஜ். அதேபோல் பிரபல பாடகி ஒருவர் இரண்டாவது திருமணம் செய்கிறார். தமிழில் புண்ணியவதி என்ற படத்தில் இளையராஜா இசையில் உனக்கொருத்தி, காதல் ரோஜாவே படத்தில் நினைத்த வரம் ஆகிய பாடல்களும் பத்ரி படத்தில் ரமண கோகுல இசையில் காதல் சொல்வது என்ற பாடலும் பாடியதுடன் தெலுங்கில் பிரபல இசை அமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட பல்வேறு இசை அமைப்பாளர்கள் இசையில் ஏராளமான பாடல்கள் பாடியிருப்பவர் சுனிதா.
இவருக்கு 19வயதாக இருக்கும் போதே கிரண் கோபுராஜூ என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். இவரது மகள் ஸ்ரேயா கோபு ராஜூ தற்போது பாடகியாக இருக்கிறார். இதற்கிடையில் கிரணுக்கும் சுனிதாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது சுனிதாவுக்கு 42வயது ஆகிறது. இந்த வயதில் டிஜிட்டல் மீடியா சி இ ஓ ராம் என்பவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். ராமும் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு முதல் மனைவி மூலம் குழந்தைகள் இல்லை. ராம், சுனிதா இருவருக்குமே இது 2வது திருமணம் என்பதால் மிக எளிமையாக நடத்த முடிவு செய்தனர். சுனிதாவுக்கும். ராமிற்கும் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சுனிதாவின் மகன், மகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி சுனிதா கூறும் போது,எல்லா தாய்போல் நானும் எனது பிள்ளைகள் நன்கு செட்டிலாக ஆக வேண்டும் என்று என்ணியிருந்தேன். அதே சமயம் நல்ல குணமும், சிந்தனை திறனுள்ள பிள்ளைகளாக அவர்கள் இருப்பதால் நானும் வாழ்வில் செட்டிலாக வேண்டுமென்று எண்ணினார்கள். அதற்கான நேரம் வந்திருக்கிறது. ராம் என் வாழ்வில் வந்தார். எனக்கு நல்ல நண்பராகவும், நல்ல வாழ்க்கை துணைவராகவும் அமைந்தார் என்றார். டிசம்பர் மாதமே சுனிதா-ராம் திருமணம் நடக்கவிருந்தது. அவர்கள் புது வீடு கட்டி வந்ததால் அது முடிந்தபிறகு திருமணம் செய்ய எண்ணினார்கள். திட்டமிட்டப்படி புதுவீட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று இவர்கள் திருமணம் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்க இந்து முறைப்படி நடந்தது. சுனிதாவின் மகன், மகள் இருவரும் முன்னின்று தங்களது தாயின் 2வது திருமணத்தை மகிழ்ச்சியாக நடத்தி வைத்தனர். சுனிதா திருமண படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.