அசைவம் சாப்பிடுவதால் பறவைக்காய்ச்சல் பரவுமா?... மருத்துவர்கள் விளக்கம்
பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், கோழி இறைச்சி சாப்பிடுவது குறித்து மருத்துவர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளனர். கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், 'ஏவியன் இன்ஃப்ளுயன்ஸா' எனப்படும் பறவைக் காய்ச்சல் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. கேரளா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், அரியானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்திலும், அண்டை மாநிலமாக கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவவில்லை. எனினும் 1997-ம் வருடம் ஹாங்க் காங் நாட்டில் பறவை இனத்தில் இருந்து மனித இனத்திற்கு H5N1 வகை இன்ஃப்ளூயன்சா தொற்று பரவிய 18 பேரில் 6 பேர் மரணடைந்தனர்.தற்போது இந்தியாவில் பரவலாக காணப்பட்டு வரும் வைரஸ் வகை H5N8 ஆகும். இது மனிதர்களிடம் பரவி நோய் தொற்றை இதுவரை ஏற்படுத்தியதில்லை.
இந்நிலையில் கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவுமா என்பது குறித்து அசைவப் பிரியர்களிடையே சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். ஃபரூக் அப்துல்லா கூறுகையில், கோழி மற்றும் பறவை இனங்களின் இறைச்சி மற்றும் முட்டைகளை சமைத்து முடித்த பின் நன்றாக சோப் போட்டுக் கை கழுவிவிட வேண்டும். இறைச்சியை நன்றாக கட்டாயம் வேகவைத்து சாப்பிட வேண்டும். முட்டைகளை அரைவேக்காடாக உண்பதை தவிர்க்க வேண்டும்.
நன்றாக வேகவைத்தால் இறைச்சியில் வைரஸ் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். எனவே, முட்டைகளையும் கோழிக்கறி வாத்துக்கறி போன்றவற்றை எப்போதும் போல உண்பதில் பிரச்சனை இருக்காது. கோழிக்கறி, வாத்துக்கறி, கோழி மற்றும் இதர பறவை முட்டைகள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவும் என்று வதந்தி பரப்பினால் நம்பாதீர்கள். நீங்களும் வதந்தியை பரப்பாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.