சிராஜுக்கு எதிராக இன்றும் இனவெறி தாக்குதல் 6 ஆஸ்திரேலிய ரசிகர்கள் வெளியேற்றம்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு எதிராக இன்றும் சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக இந்திய வீரர்கள் புகார் செய்ததால் 6 ஆஸ்திரேலிய ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக எப்போதும் ஒரு புகார் கூறப்படுவது உண்டு. எதிர் அணியினரை ஆத்திரமூட்டும் வகையில் பேசி அவர்களை வம்புக்கு இழுப்பது இவர்களது வழக்கம். இந்தியா, இங்கிலாந்து உட்பட பல நாட்டு வீரர்கள் இது தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர்களுடன் அடிக்கடி மோதிய சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில் சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்கள் மீது கடந்த சில நாட்களாக தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் சிராஜுக்கு சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியான விமர்சனங்களை செய்தனர். அன்று இந்திய வீரர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நேற்றும் அதேபோல ஆஸ்திரேலிய ரசிகர்கள் பும்ரா மற்றும் சிராஜுக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய கேப்டன் ரகானே நடுவர்களிடம் இது தொடர்பாக புகார் செய்தார்.
இந்திய அணியும் முறையாக புகார் கொடுத்தது. இந்நிலையில் இன்றும் அதேபோல சம்பவம் மீண்டும் நடந்தது. இன்றைய போட்டியின் போது கிரீனுக்கு எதிராக ஓவர் வீசிவிட்டு வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் சிராஜுக்கு எதிராக மோசமான சில கருத்துக்களை தெரிவித்தனர். இது குறித்து அவர் உடனடியாக கேப்டன் ரகானேவிடம் கூறினார். உடனே ரகானே நடுவர்களிடம் புகார் செய்தார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று 6 ஆஸ்திரேலிய ரசிகர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் இன்று சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.