பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கு இன்று 81வது பிறந்த நாள் மூகாம்பிகா கோவிலுக்கு செல்லவில்லை
பழம்பெரும் சினிமா, கர்நாடக இசை மற்றும் பக்திப் பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கு இன்று 81வது பிறந்த நாளாகும். கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கொல்லூர் மூகாம்பிகா கோவிலில் இசைக் கச்சேரி நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் அவர் மூகாம்பிகா கோவிலுக்கு செல்லவில்லை. கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் என அழைக்கப்படும் கே.ஜே. யேசுதாஸ் கேரளாவில் கான கந்தர்வன் என்றும் தாசேட்டன் என்றும் அழைக்கப்படுகிறார். முறைப்படி சங்கீதம் பயின்ற இவர், 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கொச்சியில் பிறந்தார். இவரது தந்தை அகஸ்டின் ஜோசப்பும் சிறந்த பாடகர் ஆவார்.
கடந்த 1961ல் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.பி. ஸ்ரீனிவாசனின் இசையில் பாடத் தொடங்கிய இவர், கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி, ஒரியா, அரபி, ஆங்கிலம், லத்தீன், ரஷ்யா உள்பட ஏராளமான மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் முள்ளும் மலரும் படத்தில் இவர் பாடிய செந்தாழம் பூவில், மூடுபனியில் பாடிய என் இனிய பொன் நிலாவே, அவள் அப்படித்தான் படத்தில் பாடிய உறவுகள் தொடர்கதை, இன்று போல் என்றும் வாழ்க படத்தில் பாடிய தெய்வம் தந்த வீடு, நெற்றிக்கண் படத்தில் பாடிய ராமனின் மோகனம், அபூர்வ ராகங்கள் படத்தில் பாடிய அதிசய ராகம், மூன்றாம் பிறை படத்தில் பாடிய கண்ணே கலைமானே உள்பட நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன.
சினிமாவில் பாடுவதோடு மட்டுமில்லாமல், தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். இதில் விஜய் யேசுதாசும் சிறந்த பாடகர் ஆவார். இந்நிலையில் ஏசுதாஸ் இன்று தன்னுடைய 81வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கொல்லூர் மூகாம்பிகை தேவியின் தீவிர பக்தரான இவர், ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் மூகாம்பிகா கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பல மணி நேரம் கர்நாடக இசைக் கச்சேரி நடத்துவது வழக்கம். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இவர் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இவ்வாறு இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக ஏசுதாஸ் கொல்லூர் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. ஆனாலும் அவருக்கு பதிலாக கேரளாவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் இன்று கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் இசைக் கச்சேரி நடத்துகிறார்.