17 வயது மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது

17 வயது மாணவி ஒருவரை பாஜக எம்.எல்.ஏ செங்கர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உபி மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது மாணவி ஒருவரை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பாலியல் வன்முறை செய்தனர். இதுகுறித்து அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

அவர் இதுபற்றி ஏற்கெனவே இரண்டு முறை போலீசில் புகார் அளித்துள்ளார். எனினும் உத்தரப்பிரதேச பாஜக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு போராடியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த குல்தீப்பின் சகோதரரும், சில பாஜகவினரும் அந்த பெண்ணின் தந்தையான சுரேந்திரா சிங்கை மோசமாக தாக்கியுள்ளனர். ஆனால் காவல் துறையினர், ஒரு பழைய வழக்கைக் காரணம் காட்டி, விசாரணை என்ற பெயரில் போராடிய பெண்ணின் தந்தையையே கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாஜக-வினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருந்த சுரேந்திரா சிங்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உடல்நிலை மோசமாகி உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க அனுமதிக்காமல் எம்.எல்.ஏ. தடுத்து வருவதாக அந்த பெண் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அத்துடன், தனது குடும்பத்தினருடன், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் வீடுமுன்பு, தீக்குளிப்பு முயற்சியிலும் ஈடுபட்டார். அப்போது, அந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்த போலீசார், பின்னர் விடுதலை செய்தனர்.

இந்நிலையில், சிறையில் இருந்த சுரேந்திரா சிங்கின் உடல் நிலை மோசமடையவே, அவரை இரவோடு இரவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிறன்று இரவு சுரேந்திரா சிங் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து இந்த விஷயம் சூடுபிடிக்கவே வேறு வழியின்றி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதனிடையே இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்ற அலஹாபாத் உயர்நீதிமன்றம், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏவை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது.

இதனையடுத்து இன்று அதிகாலை புகாருக்குள்ளான பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டார். இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>