இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் தேவை
இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் இன்று ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்று 4-வது நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 338 ரன்கள் எடுத்தது. இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்சில் 244 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 407 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் இந்தியா தன்னுடைய 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இருவரும் மிக சிறப்பாகவும், கவனமாகவும் விளையாட தொடங்கினர். ஆனால் 31 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மான் கில் ஹேசில்வுட்டின் பந்தில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 71 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் ரோகித்துடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே அரை சதம் அடித்த ரோகித் சர்மா, 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்சின் பந்தில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 92 ரன்களில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின்னர் புஜாராவுடன் கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தார். இன்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 9 ரன்களுடனும், கேப்டன் ரகானே 4 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் எடுக்க வேண்டும். நாளை கடைசி நாள் ஆட்டமாகும். தற்போதைய சூழ்நிலையில் இந்த இமாலய வெற்றி இலக்கை இந்தியாவால் எட்ட முடியுமா என்பது சந்தேகமே.