அரசியலுக்கு வர ரஜினி மறுபரிசீலனை? ரசிகர்கள் போராட்டம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஐதரப்பாத்தில் நடந்த அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்க சென்றார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சுமார் 14 மணி நேரம் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். திடீரென்று அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 நாள் சிகிச்சை பெற்றவர் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி சென்னை திரும்பினார். அரசியல் கட்சி அறிவிப்பு வெளியிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று அறிவித்து ஷாக் கொடுத்தார்.
ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி டாக்டர்கள் அவரை முழு ஓய்வில் இருக்க கேட்டுக் கொண்டனர். அவரும் அதனை பின்பற்றி வருகிறார். இதற்கிடையில் ரஜினி ரசிகர்கள் பலர் அவர் வீட்டு முன்னால் அமர்ந்து ரஜினியை அரசியலில் ஈடுபட கேட்டு கோஷம் எழுப்பினார்கள். ரஜினிகாந்த் தான் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறார் என்று அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தனது ஆன்மிக சிந்தனையில் முழுமையாக கவனம் செலுத்தும் அவர் தினமும் தியானத்தில் ஈடுபடுகிறார். இந்நிலையில் அவர் அமெரிக்க செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன் ஜக்குபாய் என்ற படத்தில் நடிக்கவிருந்தார். அதன் படப்பிடிப்பில் இருந்த போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. குணம் அடைந்த பின் சென்னை திரும்பினார்.
பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார். காலா, கபாலி, பேட்ட, தர்பார் போன்ற படங்களில் நடித்தார். அடுத்த அண்ணாத்த படப்பிடிப்பில் நடித்து வருகிறார். தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனையில் அவர் தனது உடல்நிலை பரிசோதனை மேற்கொள்வதுடன் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துக் கொண்டதற்கான மேற்பரிசோதனைகள் செய்யவிருக்கிறாராம். அவருடன் குடும்பத்தினர் அனைவரும் செல்ல விருப்பதாகவும் கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய பிறகே அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்பது எப்போது என்பது பற்றி முடிவு செய்கிறார் எனப்படுகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்த்துக்கு புதிய டென்ஷன் உருவாகி இருக்கிறது.
ரஜினி காந்த் அரசியலுக்கு வருவார், ஆட்சியை பிடிப்பார் என்று 30 வருடமாக காத்திருந்த அவரது ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததும் கோபம் அடைந்தனர். ரஜினியை அரசியலில் ஈடுபட வைக்க ரசிகர்கள் இணைந்து போராடுவது என்று முடிவு செய்து அதற்கான ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபட்டனர். ஏராளமான ரசிகர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இந்த தகவல் ரஜினிக்கு தெரிய வந்தவுடன் அவர் அதிர்ச்சி அடைந்தார். ரஜினியின் மக்கள் நற்பணி இயக்கம் சார்பில் அதன் நிர்வாகி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தலைவர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும் தன்னை நம்பி அரசியலுக்கு வரும் ரசிகர்களை பாதியில் தவிக்க விட எண்ணாமில்லாததாலும் தான் அரசியல் பிரவேசம் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டை தெளிவாகக் கூறிய பிறகும் அவரை அரசியலுக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. போராட்டம் நடத்துவதற்காக சிலர் வசூலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவந்திருக்கிறது.
போராட்டம் நடத்த வேண்டாம். ரஜினி மக்கள் மண்றத்தினர் யாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் ஏராளமான ரசிகர்கள் இன்று காலை 9 மணி அளவில் தலைவர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் அரசியல் மாற்றம் விரும்பும் மக்கள், சமூக நலனுக்காக ஏங்குபவர்கள், ரசிகர்கள் என ஆயிரக் கணக்கானோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கவன ஈர்ப்பு அறப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ரஜினியை அரசியலில் ஈடுபட வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு யாரும் பங்கேற்க வில்லை. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் இது ரஜினியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தப்படும் அடையாள அறப்போராட்டம் ஆகும். இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மக்களிடம் சென்று அரசியல் மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் வரை தொடருவோம் என்று கூறினர்.