இனவெறி விமர்சனம் சிட்னியில் இது வழக்கமான ஒன்று தான் எனக்கும் அனுபவம் உண்டு அஷ்வின் கூறுகிறார்
இனவெறி விமர்சனம் சிட்னி மைதானத்தில் எப்போதும் நடைபெறும் ஒன்று தான். எனக்கும் இது போன்ற அனுபவங்கள் பல முறை நடந்துள்ளன என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது போட்டியின் கடைசி தினமான நாளை தெரியும். இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் தேவை. கையில் 8 விக்கெட்டுகள் உள்ளன. புஜாராவும் கேப்டன் ரகானேவும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வீரர்களான பும்ரா மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோருக்கு எதிராக சிட்னி மைதானத்தில் இனவெறி விமர்சனம் எழுந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் இரண்டாவது நாளே மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எதிராக இனவெறி விமர்சனம் நடத்தினர்.
ஆனால் முதலில் இருவரும் அதை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் அடுத்த நாளும் இது தொடர்ந்தது. இதையடுத்து இருவரும் கேப்டன் ரகானேவிடம் சம்பவம் குறித்து புகார் செய்தனர். உடனடியாக ரகானே மைதானத்தில் இருந்த நடுவர்களிடம் புகார் செய்தார். மேலும் இதுகுறித்து இந்திய அணி சார்பிலும் முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அடங்கவில்லை. இன்றும் சிராஜுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி விமர்சனம் நடத்தினர். இதையடுத்து கேப்டன் ரகானே மீண்டும் நடுவர்களிடம் புகார் செய்தார். உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் தலையிட்டு சம்பவம் தொடர்பாக 6 ஆஸ்திரேலிய ரசிகர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதனால் இன்றைய ஆட்டம் 10 நிமிடங்கள் தடைபட்டன. பின்னர் இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் அணியிடம் மன்னிப்பு கோரியது. இந்நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், தனக்கும் இது போன்ற அனுபவங்கள் சிட்னியில் நடந்துள்ளன என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியது: சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இதுபோல இனவெறி விமர்சனம் இதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளன. இது இந்த மைதானத்தில் வழக்கமான ஒன்று தான். எனக்கு எதிராகவும் பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அடிலெய்டிலும், மெல்பர்னிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதில்லை. சிட்னி ரசிகர்கள் மோசமான நடத்தை உள்ளவர்கள். எதற்காக அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.