திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு பெண் ஊழியர் சஸ்பெண்ட்

சேலம் மாவட்டத்தில் திமுக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிராம உதவியாளர் இரவோடிரவாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கல்யாணகிரி கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் கல்பனா.

துக்கியாம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த கல்பனா பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் சில தினங்களுக்கு முன் ஏற்காட்டில் முளுவி என்ற கிராமத்தில் திமுக சார்பில் நடத்தப்படும் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து கல்பனாவை பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நள்ளிரவு 12 மணிக்கு இந்த உத்தரவு தயாரிக்கப்பட்டு இரவோடு இரவாக கல்பனாவிடம் வழங்கப்பட்டுள்ளதா ம். அரசு பணியில் உள்ள ஒருவர் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசு விதிகளின்படி குற்றமாகும். இதற்காகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News >>