இந்தியாவில் 7 மாதங்களில் குவிந்தது 33 ஆயிரம் டன் கொரோனா கழிவுகள்
இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் கொரோனா கழிவுகள் குவிந்தது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 2,806 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் தமிழ்நாடு இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரிசோதனைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும், சிகிச்சைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. மருத்துவமனைகள் உட்படப் பகுதிகளில் டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள் உட்படப் பெரும்பாலானோர் பாதுகாப்பு கவச உடை, முகக் கவசங்கள், கையுறைகள் உள்பட பொருட்களை பயன்படுத்த தொடங்கினர்.
இதனால் நாடு முழுவதும் கொரோனா கழிவுகள் குவியத் தொடங்கின. இதையடுத்து இந்த கழிவுகளை முறைப்படி அப்புறப்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வருடம் மார்ச்சில் தனியாக அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுரைகள் வழங்கியது. இந்த கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும்,ஒருங்கிணைப்பது மற்றும் கண்காணிப்பதற்காகவும் கோவிட் 19 பிடபிள்யு எம் என்ற பெயரில் ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் இந்த 'ஆப்'பை கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் வரை சேகரிக்கப்பட்ட கொரோனா கழிவுகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை 7 மாதங்களில் நாட்டில் 33 ஆயிரம் டன் கொரோனா கழிவுகள் சேர்ந்துள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கையைப் போலவே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் மிக அதிகமாக 5,367 டன் கழிவுகள் குவிந்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் 3,300 டன்களுடன் கேரளா 2வது இடத்தையும், 3,086 டன்களுடன் குஜராத் 3வது இடத்தையும், 2,806 டன்களுடன் தமிழ்நாடு 4வது இடத்தையும் பிடித்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று 16,513 பேருக்கு நோய் பரவியுள்ளது. மரண எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பல மாதங்களுக்குப் பின்னர் மரண எண்ணிக்கை 200ஐ விடக் குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 25ம் தேதி 151 பேர் மரணமடைந்தனர். அதன்பிறகு நேற்று தான் மரண எண்ணிக்கை 200ஐ விடக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.